Subscribe:

வியாழன், 21 நவம்பர், 2013

4 கோயில்களில் கும்பாபிஷேகம்

பொன்னமராவதி, :  பொன்னமராவதி அருகே உள்ள ரெட்டியாபட்டியில் உள்ள வெங்கடத்தி அம்மன், வெங்கடேச பெருமாள், பிடாரி அம்மன் சுவாமிகளின் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கடந்த 11ம் தேதி முதல் யாகசாலை பூஜை நடந்தது. நேற்று கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் கோபுரத்தில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றினர். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ரெட்டியாபட்டி பொதுமக்கள் செய்திருந்தனர்.
திருமயம்: திருமயம் ஒன்றியம் ஆத்தூர் காருடையார் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி முதல் கால, 2ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று சுப்பையா சிவாச்சாரியார் தலைமையில் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருமயம் ஒன்றிய முன்னாள் துணை சேர்மன் ஆவுடையப்பன், ஊராட்சி தலைவர்கள் சரஸ்வதி, சிங்காரம், திருப்பணிக்குழு தலைவர் சின்னையா, நிர்வாகிகள் கருப்பையா, பிடாரன், வருவாய் ஆய்வாளர் அபுபக்கர், பனையப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கவிஞர் கஸ்தூரிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமயம் ஒன்றியம் மேலப்பனையூர் அருகே உள்ள குளமங்கலம் பராசக்தி அம்மன்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் சுப்பிரமணியன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கருப்பையா, முன்னாள் கவுன்சிலர் அழகப்பன், ஊராட்சி தலைவர் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ராங்கியம் அடுத்த குருவிக்கொண்டான்பட்டியில் உள்ள விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் கும்பாபிஷேக விழா கமிட்டியினர், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

...காலம் ...

...காலம் ...
கவிஞர் கஸ்தூரிநாதன் - குழிபிறை

பிள்ளையாய் பிறந்த காலம்
பிறகுநான் தவழ்ந்த காலம்
துள்ளியே திரிந்த காலம்
பள்ளியில் படித்த காலம் 
பாவையை பிடித்த காலம் 
வெள்ளமாய் திரண்ட காலம் 
வீணான கெட்ட காலம் 

காதலில் கொஞ்ச காலம் 
காமததில் கொஞ்ச காலம் 
நோதலில் கொஞ்ச காலம் 
நோய்தனில் கொஞ்ச காலம்
வேதனை கொஞ்ச காலம் 
வீணுக்கு கொஞ்ச காலம் 
ஆதலால் வாழ்ந்த காலம் 
அனைத்தும் கெட்ட காலம்

கனவிற் மிதந்த காலம் 
கற்பனையில் பறந்த காலம் 
தினமும் நான் நடந்த காலம் 
திகைத்து நான் கிடந்த காலம் 
மனதுக்குள் அழுத காலம் 
மற்றவர்கள் வதைத்த காலம் 
நினைவுகள் குறைந்த காலம் 
நினைத்திட்டால் கெட்ட காலம் 

பகையினை வளர்த்த காலம்
பாதை நான் தொலைத்த காலம் 
வகையின்றி உழன்ற காலம் 
வாழ்வெலாம் சூழன்ற காலம் 
தகையிலா இந்தக் காலம்
தாரகை உதிர்த்த காலம் 
சிகையென கொல்லும் காலம் 
முடியட்டும் எனது காலம் 

நன்றி : இனிய நந்தவனம் இதழ் 2008 

கவிஞர் மன்ற நிர்வாகிகள் கூட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கவிஞர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் மற்றும் கவியரங்கம் நடந்தது. கவிஞர் நாகூர் தலைமை வகித்தார். கவிஞர் மன்றத் தலைவர் நிலவை பழனியப்பன் வரவேற்றார். செயலாளர் முத்துப்பாண்டியன், துணைத் தலைவர் பீர்முகம்மது, துணைச் செயலாளர் சுந்தர், இலக்கியப் பேரவைத் தலைவர் முத்துசீனிவாசன், கம்பன் கழகத் தலைவர் ராமையா மற்றும் கவிஞர்கள் கஸ்தூரிநாதன், மூ.பா, துரை சரவணன், முருகபாரதி உட்பட கவிஞர்கள் பலர் கவிதை வாசித்தனர்.

புதன், 20 நவம்பர், 2013

முனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வு.

கல்வி கரையில....
                 
                  இன்று 28.06.2013 பிற்பகல்  புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் , எனது இனிய நண்பரும் மணிமன்ற உறுப்பினருமான கவிஞர் வீ.கே.கஸ்தூரிநாதன் (எ) வீ.கருப்பையன் அவர்களுக்கான  முனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வு நடைபெற்றது.

               “ மெய்ப்பாட்டு நோக்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள் ” எனும் தலைப்பில் ஆய்வேடு அளித்திருந்தார்.  தமிழகத்தின் தலைசிறந்த 16 மரபுக்  கவிஞர்களின் மறுமலர்சிப் பாடல்களை நுணுகி ஆய்ந்திருந்தார்.
               சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் வழிகாட்டலில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டிருந்தது.

               தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத்துறை பேராசிரியர் முனைவர் இரா. காமராசு அவர்கள் புறத்தேர்வாளராக வாய்மொழித் தேர்வினை நடத்தினார்.
ஆய்வின் முக்கிய கருத்துகளை ஆய்வாளர் வழங்க பொது மதிப்பீட்டாளர்களால் வினாக்கள் தொடுக்கப் பட்டு விளக்கங்கள் பெறப்பட்டன.

               மாமன்னர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சு.மாதவன், முனைவர் செல்வராசு, முனைவர் முருகானந்தம், கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் கண்ணன் ஆகியோர் ஆய்வு பற்றிய வினாக்களைத் தொடுத்தனர்.

             பேராசிரியர் வீ.வைத்தியநாதன், புலவர் மு.பா, மு.முத்துசீனிவாசன், நிலவை பழனியப்பன், இரா.சம்பத்குமார், பாவலர் பொன்.கருப்பையா,  சுகுமாரி, மகாசுந்தர் , மாமன்னர் கல்லூரி ஆய்வுப்பட்ட மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.

            பொது மதிப்பீட்டாளர்களின் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் புறத்தேர்வாளர்  முனைவர் இரா.காமராசு அவர்கள்,  வீ.கருப்பையன்  அவர்களை அவரது ஆய்வுக்காக மதிப்புறு முனைவர் பட்டத் தகுதிக்கு பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு பரிந்துரை செய்தார்.

          மாமன்னர் கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் சி.சேதுராமன் அவர்கள் முன்னிலையில்  நடந்த நிகழ்ச்சி பாராட்டிற்குரியதாக அமைந்திருந்தது.
Posted by Pavalar Pon.Karuppiah Ponniah at 9:18 AM  

கம்பன் விழா இன்று தொடக்கம்

புதுக்கோட்டை கம்பன்கழக 38 -ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் புதன்கிழமை (அக்.16) தொடங்கி 20-ம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது.
 புதுக்கோட்டை டவுன்ஹாலில் புதன்கிழமை நடைபெறும் தொடக்க விழாவில் மலர் வெளியிடும் நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன், அரசு முதன்மைச் செயலர் வெ. இறையன்பு, சாகித்ய அகாதெமி ஆலோசனைக்குழு உறுப்பினர் தங்கம்மூர்த்தி, கோவை கம்பன் கழகச்செயலர் நா. நஞ்சுண்டன், சேலம் ஏ.கே. பழனியப்பன், பி. கருப்பையா, மருத்துவர் கே.எச். சலீம், பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
 2-ம் நாளான வியாழக்கிழமை நடைபெறும் திருச்சி அகில இந்திய வானொலி நிலைய 75 -ம் ஆண்டு நிறைவு வைரவிழாவில், கம்பன் கழகச்செயலர் ரா. சம்பத்குமார், திருச்சி வானொலி நிலைய இயக்குநர் (பொ) போ. பிரபாகரன் உள்ளிட்டோர் பேசுகின்றனர். , இதையடுத்து நடைபெறும் சந்திப்பு வளையம் நிகழ்வில் பேராசிரியர் ஆ.வா. ராஜகோபாலன் ஆகியோர் பேசுகின்றனர். இரவு பேராசிரியர் சோ. சத்தியசீலன் தலைமையில் வழக்காடு மன்றம் நடைபெறுகிறது.
 அக்.18-ல் இளையோர் மன்றம், தேவகோட்டை ஏ.ஆர். ராமநாதனை நடுவராகக் கொண்ட வழக்காடு மன்றம், இரவு வர்த்தகர் கழகத் தலைவர் சீனு. சின்னப்பா தலைமையில் தமிழிசை அரங்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 நான்காம் நாள் (அக்.19) மாலை டாக்டர் வீ.கே.ஆர். நூற்றாண்டு விழா, இதையடுத்து இரவு குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் அ. ரவிச்சந்திரன் தலைமையில் கவியரங்கு நடைபெறுகிறது. 
 நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் எஸ். சந்துரு தலைமையில் நடைபெறும் மகளிர் சுழலும் சொல்லரங்கில், முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி, சென்னை பர்வின்சுல்தானா உள்ளிட்டோர் பேசுகின்றனர். இதையடுத்து பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. 
 ஏற்பாடுகளை புதுகை கம்பன் கழக நிர்வாகிகள் சீனுசின்னப்பா, ரெ. ராமையா, ரா. சம்பத்குமார், சி. கோவிந்தராஜன், அ. காசிவிசுவநாதன், சி. ராமச்சந்திரன், சி. ராமச்சந்திரன், எஸ்.ஆர். ஜானகிராமன், கறு. ராமசாமி, வீ.கே. கஸ்தூரிநாதன் உள்ளிட்டோர் செய்கின்றனர்.